ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பி.ஜெயந்திபிச்சாண்டி தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-01 18:43 GMT



பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பி.ஜெயந்திபிச்சாண்டி தெரிவித்துள்ளார்.

பெரும்புலிப்பாக்கம் ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்புலிப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பெரும்புலிப்பாக்கம், சமத்துவபுரம், சங்கரன்பாடி சத்திரம் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த பி.ஜெயந்திபிச்சாண்டி உள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து கூறியதாவது:-

பெரும்புலிப்பாக்கம் சமத்துவபுரத்தில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், மெயின்ரோடு கூட்டு சாலையில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தில் பைப்லைன், வடக்கு தெருவில் ரூ.68 ஆயிரம் மதிப்பில் பைப்லைன், எம்.பி.டி. ரோடு குடிநீர் தொட்டியில் இருந்து பனப்பாக்கம் கூட்டு சாலை வரை ரூ.90 ஆயிரத்தில் பைப்லைன், பள்ள தெருவில் ரூ.3½ லட்சத்தில் சிமெண்டு சாலை, ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், சமத்துவபுரத்தில் ரூ.4 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் பைப்லைன், ஒடுகத்தூர் தெருவில் ரூ.52 ஆயிரத்தில் பைப்லைன், பள்ள தெருவில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் பைப்லைன், ரூ.62 ஆயிரத்தில் 2 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்தில் முருங்கை நர்சரி உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம்

பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் மக்கும், மக்காத குப்பை தொட்டிகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

நான் தினமும் காலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டுக்கும் நேரடியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் சரி செய்து கொடுத்து வருகிறேன்.

ஊராட்சியில் மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாகவே அந்த குறைகளை நான் நேரடியாக அறிந்து அதை சரிசெய்து கொடுத்து வருகிறேன். ஊராட்சியில் தங்கு தடை இல்லாமல் குடிநீர் கிடைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் கூடுதல் குழாய்கள் பொருத்தி குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன்.

பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் 10 கிலோ மீட்டர் தொலைவில் காவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே மக்களின் நலனுக்காக பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சமையல் கூடம், பெரும்புலிப்பாக்கம், சமத்துவபுரம் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம், பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்திற்கு புதிய கட்டிடம், உடற்பயிற்சி கூடம் அமைக்க கோரிக்கை வைத்து உள்ளேன்.

முதன்மை ஊராட்சியாக...

பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியை குடிசையில்லா ஊராட்சியாக மாற்ற 85 பயனாளிகள் கண்டறியப்பட்டு பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகளில் பழுதடைந்த வீட்டின் பயனாளிகளுக்கு அந்த வீட்டை அப்புறப்படுத்தி புதிய வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெரும்புலிப்பாக்கம் நடுத்தெரு, மேட்டு தெருவில் சிமெண்டு சாலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு மாதம் ஒரு முறை நான் நேரடியாக சென்று சத்துணவு சரியாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து வருகிறேன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியை உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மையான ஊராட்சியாக மாற்ற அமைச்சர் ஆர்.காந்தி, காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, துணைத்தலைவர் முனியம்மாள் கணேசன், மாவட்ட கவுன்சிலர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தகுமார் ஆகியோரின் ஒத்துழைப்போடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.ஜெயந்திமோகன், வார்டு உறுப்பினர்கள் மலர்சிவா, எஸ்.தாண்டவமூர்த்தி, சங்கீதாகுமார், மீனாட்சிஜெயராமன், கீதாமுனுசாமி, ஜெ.முனுசாமி, ஜெ.ஆதிகேசவன், ஜி.சுந்தர் ஆகியோருடன் இணைந்து மாற்றுவேன் என்று ஊராட்சி மன்ற தலைவர் பி.ஜெயந்தி பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்