சட்ட உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2022-08-25 15:00 GMT

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்ட உறுப்பினர் நியமனம்

மின்கட்டண உயர்வு தொடர்பாக கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் உடனடியாக அதை நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவையில் நடந்த அரசு விழாவில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இது ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் வழங்கி யதாக கூறுவது சரியல்ல. தற்போது நாங்கள் உதவி வழங்கிய பயனாளிகளின் பட்டியல் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதா?.

நலத்திட்ட உதவிகள்

இது கடந்த 4 மாதங்களாக பயனாளிகள் பட்டியல் தயாரித்து உதவி வழங்கி உள்ளோம். அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சி னைகளை, வழங்க முடியாத திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்து 15 மாதங்களில் தீர்த்து, நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

5 ஆண்டு காலத்தில் 50 ஆண்டு கால வளர்ச்சி என்று ஒரு வெற்று விளம்பரத்தை முன்வைத்தார்கள். அப்படி வளர்ச்சி பணி நடந்து இருந்தால் கோவை மாநகராட்சி பகுதியில் ஏன் இன்னும் 115 கி.மீ. தூரம் மண்சாலை உள்ளது?. ஏன் சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனில்லாத நிலையில் இருந்தது.

வெள்ளலூர் பஸ்நிலையம்

அவர்கள் கூறுவது போல் வளர்ச்சி அடைந்து இருந்தால் நாங்கள் மக்கள் சபை நடத்திய போது 1 லட்சத்து 41 ஆயிரம் மனுக்கள் வந்து இருக்காதே. அந்த மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில்தான் கோவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெள்ளலூர் பஸ்நிலையத்தை பொருத்தவரை அது நகராட்சி நிர்வாகத்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய திட்டம்.

அதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மற்றும் துறை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு. இந்த பஸ்நிலையத்துக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிதி எவ்வளவு வழங்கப்பட்டது?.

செலவு செய்ததில் அரசு நிதி எவ்வளவு? என்று கூறிவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை அவர்கள் செய்யட்டும்.

நிதி ஒதுக்க வில்லை

அடிப்படை வசதிகளை மேம்படுத்த இருக்கக் கூடிய மாநகராட்சி நிதியை எடுத்து பஸ்நிலைய கட்டுமான பணிக்கு செலவினங்கள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் கடந்த ஆட்சியில் அரசு சிறப்பு நிதி ஒதுக்கி வெள்ளலூர் பஸ் நிலைய பணி தொடங்கியதை போல முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறி இருக்கிறார்.

அவர், மாநில அரசு சார்பில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக தினமும் ஏதேதோ கூறி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்