வெளிமாநில தொழிலாளர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை
வெளிமாநில தொழிலாளர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை
கோவை
வெளிமாநில தொழிலாளர்கள் விபரங்களை அரசு இணையதளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த மண்டல கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சிறப்பு முகாம்கள்
கோவை மண்டல தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்சினைகள், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் மற்றும் பணிபுரியும் நிறுவனங்களை கண்டறிவது, சிறப்பு முகாம்கள் நடத்தி அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் https://labour.tn.gov.in/ismஎன்ற அரசு இணையதளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பு முகாம்கள் நடத்தி அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் பங்கேற்றனர். தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் பேசும்போது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டம் நடத்தி ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.