இரவு நேர பணியில் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேர பணியில் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.

Update: 2022-08-27 18:07 GMT

பொறையாறு:

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேர பணியில் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

சக்கரபாணி:- மேலையூர், கருவாழக்கரை, மேலப்பாதி, கஞ்சாநகரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வெட்டாற்றங்கரையில் கீழ்குமிழி அமைத்து பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மருதூரில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

சுப்பிரமணியன்:- கஞ்சாநகரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். கஞ்சாநகரம் தெற்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.

கிருஷ்ணன்:-செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கூடுவதால் விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி மாலை நேரங்களில் கூடுதலாக போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும். செம்பனார்கோவில் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

சாலையை சீரமைக்க வேண்டும்

லட்சுமிபதி:- திருவிளையாட்டம்- கலசம்பாடி தாமரைக்குளம் சாலை, குமாரமங்கலம்-எரவாஞ்சேரி இணைப்பு சாலை ஆகிய சாலைகளை சீரமைக்க வேண்டும்.

சியாமளா ஸ்ரீதர்:-கீழையூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை தரமாக செய்ய வேண்டும். நடுக்கரை ஊராட்சி பிள்ளையார் கோவில் தெரு சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும்.

டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை

நந்தினிஸ்ரீதர்(ஒன்றியக்குழு தலைவர்):- செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் பணிபுரிய டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்