ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்தில்தினசரி சந்தை அமைக்க நடவடிக்கை:கலெக்டர் செந்தில்ராஜ்

ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்தில்தினசரி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-27 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்தில் தினசரி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வந்தார். அவரை நகரப்பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரவேற்றனர்.

அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தூத்துக்குடி மாவட்ட நகரப்பஞ்சாயத்து உதவி இயக்குனர் கண்ணன், தூத்துக்குடி மாவட்ட நகரப்பஞ்சாயத்துகளின் உதவி செயற்பொறியாளர் மாலா ஆகியோரும் வந்திருந்தனர். நகர பஞ்சாயத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தினசரி சந்தை

அப்போது கலெக்டரிடம் நகரப்பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்துக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும். அலுவலகத்துக்கு எதிரே உள்ள குப்பைமேட்டை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தினசரி சந்தை அமைப்பதற்கான அனுமதி தர வேண்டும். காமராஜர் பூங்காவை புதுப்பித்து பராமரிக்கப்பட வேண்டும். அந்த பூங்காவை சுற்றி நடைபயிற்சி செல்ல வசதி செய்ய வேண்டும்.

நகரப்பஞ்சாயத்து எல்லையில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 10 வார்டுகளை ஆறுமுகநேரி வருவாய் கிராமத்துடன் இணைக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

குப்பை கொட்ட மாற்றுஇடம்

இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். மேலும், குப்பை மேட்டை அகற்றுவதற்கு ரூ.1 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் குப்பைமேட்டை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணியை பார்வையிட்ட அவர், துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நகரப்பஞ்சாயத்து பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு வேறொரு இடத்தை தேர்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும் நகரப்பஞ்சாயத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் காட்டு நாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த 23 பேருக்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுவது குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்