கோவில்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கோவில்களில் திருட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கோவில்களில் திருட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் இந்த சம்பவங்களில் துப்புத்துலக்கி திருடு போன பொருட்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனால் ஒரு சில பகுதிகளில் திருடு போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சிவகாசி பகுதியில் 90 பவுன் நகை திருடு போன சம்பவத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் பல திருட்டு சம்பவங்களில் துப்பு துலங்காத நிலை நீடிக்கிறது. சாத்தூரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொழிலதிபர் வீட்டில் திருடு போன சம்பவத்தில் இன்னும் துப்பு துலங்காத நிலை இருக்கிறது. ராஜபாளையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணிவு ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்து பொருட்கள், ஆவணங்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்களிலும் இன்னும் துப்பு துலக்கப்படாத நிலை நீடிக்கிறது.
கோவில்களில் திருட்டு
இந்த நிலையில் சமீபத்தில் மாவட்டத்தில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கோவில்களில் இரவு நேரங்களில் பூட்டை உடைத்து உண்டியல் மற்றும் கோவிலில் உள்ள பொருட்கள், பூஜை சாமான்களை திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாத்தூர் பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கிராமப் பகுதியில் உள்ள கோவில்களில் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடைபெற்றன.
வலியுறுத்தல்
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் அதிகரித்து வரும் கோவில் திருட்டுகளை தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.