தமிழகத்தில் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வு பணி விரைவில் நடைபெற உள்ளது என்றும், தமிழகத்தில் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வு பணி விரைவில் நடைபெற உள்ளது என்றும், தமிழகத்தில் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பாதாள சாக்கடை பணிகள்
திருச்சியில் நேற்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி மாநகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு எதிர்கால திட்டம் என்பதால், தற்போது பணிகள் நடைபெறும் போது பொதுமக்களுக்கு சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.
இந்த பணிகளை மேற்கொள்ள ஒரு சில ஒப்பந்ததாரர்களே முன்வருகிறார்கள். அவர்களை வைத்து தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதான் நிலைமை.
விரைவில் மெட்ரோ ரெயில்
திருச்சியில் மெட்ரோ ரெயில் அமைக்க ஆய்வு பணி விரைவில் தொடங்க உள்ளன. எனவே மாநகரில் பல கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட இருந்த உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ஆய்வுப்பணிகள் முடிந்த பிறகு அதற்கு தகுந்தார் போல், உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும்.
திருச்சி மாநகருக்கு ஏற்கனவே உள்ள 3 கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளன. கூடுதலாக காவிரியில் இருந்து 50 எம்.எல்.டி.யும், கொள்ளிடத்தில் இருந்து 50 எம்.எல்.டி.யும் என்று 100 எம்.எல்.டி. குடிநீர் பெற திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அவ்வாறு வந்தால் மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகிக்க முடியும்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
மேலும் கோடையில் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. கோவையில் சிறுவாணியில் தண்ணீர் இல்லாததால் 178 எம்.எல்.டி. குடிநீர் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பில்லூர் 3-வது திட்டம் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி சோதனை ஓட்டம் நடைபெறும்.
அதுபோல் சேலம் மாநகருக்கான குடிநீர் திட்டத்துக்கும் அன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அதுதவிர நாகர்கோவில் உள்பட தமிழகம் முழுவதும் பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்று (நேற்று) காலை வாக்குப்பதிவின் போது எங்களது கட்சியினரிடம் விசாரித்தேன். கை சின்னத்துக்கு அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தனர்.
அதனால் அங்கு மிக அதிக வாக்குவித்தியாசத்தில் கைச்சின்னம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் மை அழிவதாக தோல்வி பயத்தில் அ.தி.மு.க. குற்றம் சாட்டுகிறது. தி.மு.க. தலைவர் கூறியது போல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் நிலையில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.