நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் ஏ.தெக்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர சிவன் கோவில் அறங்காவலர் தணிகாச்சலம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது எதிர்தரப்பு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக கீழ்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.
பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, கோவிலுக்கு சொந்தமான இடம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு பகுதியானது, நீர்நிலை என வருவாய் ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டப்படி படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
விசாரணை முடிவில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என ஏற்கனவே இந்த கோர்ட்டு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து உரிய நபர்கள் பதில் அளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். பின்னர் இதுகுறித்து சட்டப்படி 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சிவன் கோவில் சொத்துக்களை மீட்பது குறித்து நாங்கள் எந்த முடிவையும் தெரிவிக்க விரும்பவில்லை. திருப்பத்தூர் தாசில்தார் உரிய முடிவு எடுப்பார் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.