தைல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
சலசலப்பு
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் விவசாயம் தொடர்பாக மட்டும் பேசவும் என வேளாண் அதிகாரிகள் கூறினர். இதனால் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆவேசமடைந்து ஒரே நேரத்தில் எழுந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் அதிகாரிகள் சமாதானம் செய்த பின் விவசாயிகள் பேசினர்.
தனபதி பேசுகையில், ''ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில் தைல மரங்கள் அகற்றுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடியான பாரம்பரிய நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்'' என்றார். சோமையா பேசுகையில், அம்புக்கோவிலில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என்றார்.
காவிரி-குண்டாறு திட்டம்
கொக்குமடை ரமேஷ், ''கடந்த ஆண்டில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த ஆண்டு விவசாயம் தொடங்குவதற்கு முன்பாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும். பாணவயல் மணல் குவாரியில் டிராக்டரில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். வண்டல் மண் அள்ளுவதற்கு பெறப்பட்ட மனுக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
மணமேல்குடி தாலுகா ரெண்டாணி, உக்கடை, ரெகுநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு பத்திர பதிவுத்துறை அலுவலகம் எங்கு உள்ளது என தெரிவிக்க வேண்டும்'' என்றார். மிசா மாரிமுத்து பேசுகையில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். நீர் நிலைகள், ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.
உடனடியாக பஸ் வசதி
கூத்தபெருமாள் பேசுகையில், ''பாணவயல் மணல் குவாரியில் ஒரு யூனிட் மணல் ரூ.15 ஆயிரத்திற்கு கூடுதலாக விற்கப்படுவதை தடுக்க வேண்டும். வெள்ளாற்றில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மெட்ரிக் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை பள்ளி முன்பு பதாகைகள் வைக்க வேண்டும்'' என்றார்.
கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் கவனிக்காமல் சிலர் செல்போன்களை பார்த்து கொண்டிருப்பதாக விவசாயி செல்லமுத்து என்பவர் குற்றம் சாட்டினார். இதேபோல விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். கூட்டத்திற்கு வந்து செல்லும் வகையில் அன்றைய தினங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடனடியாக கலெக்டர் கவிதாராமு நடவடிக்கை எடுத்தார். கூட்டம் முடிந்ததும் நேற்று மதியம் 2.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டது. இதில் விவசாயிகள் ஏறி பயணம் செய்தனர்.
வாழை விவசாயிகளுக்கு நிவாரணம்
முன்னதாக கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிக்கையில், ''கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரங்கள் போதுமான இருப்பில் உள்ளது. தனிநபர்கள் குளிர்பதன கிடங்கு அமைக்க தோட்டக்கலை துறையில் மானியம் வழங்கப்படும். கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதியில் வாழைகள் சேதமடைந்தது கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 277 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
பொன்னமராவதி உழவர் சந்தையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கோர்ட்டில் தடை கேட்டு சிலர் வழக்கு தொடர்ந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தடை விலக்கப்பட்ட பின் பணிகள் தொடரும். வயலோகம் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தெற்கு வெள்ளாற்றில் தடுப்பு அணை கட்ட தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்படும். தெற்கு வெள்ளாற்றில் கருவேல மரங்களை அகற்ற சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் பணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்படும். புதுக்குளம் கலிங்கில் இருந்து வரத்துவாரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தைல மரங்களை அகற்ற வனத்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து ஆணை வந்ததும் அகற்றப்படும்'' என்றனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு பதில் அளித்து பேசுகையில், ''விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற துறைவாரியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் குறித்து தனியாக ஒரு கூட்டம் நடத்தப்படும். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மாவட்டத்தில் உள்ள 94 நெல் கொள்முதல் நிலையங்களில் 84 நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் புதிதாக அம்புகோவிலில் திறக்கப்படும்'' என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.