கார் பார்க்கிங் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவண்ணாமலையில் கார் பார்க்கிங் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-07-27 17:27 GMT


திருவண்ணாமலையில் கார் பார்க்கிங் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நகரமன்ற கூட்டம்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற கூட்ட அரங்கில் நகரமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாங்கம், பொறியாளர் நீலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் நகரமன்ற வார்டு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள சாலை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும். குப்பைகளை முறையாக அகற்ற ஒவ்வொரு வார்டிற்கும் கூடுதலாக துப்புரவு பணியாளராக பயன்படுத்த வேண்டும்.

கார் பார்க்கிங் வசதி

சுத்தமாகவும், முறையாகவும் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். திருவண்ணாமலை நகர பகுதியில் கார் பார்க்கிங் வசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை இணைப்பு பெறாத கடைகாரர்களுக்கும் வரி வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு நகரமன்ற தலைவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 1 முதல் 39 வார்டுகளிலும் குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் திருவண்ணாமலை அய்யாங்குளத்தை தூய்மை அருணை மூலம் தூர்வாரி சீரமைத்தல் மற்றும் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் ஜல்லிக்கட்டு காளையுடன் கூடிய ரவுண்டானா அமைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நன்றி தொிவித்து நன்றி அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்