காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தோட்டத்திற்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயி மனு அளித்துள்ளார்.
கோவை
தோட்டத்திற்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயி மனு அளித்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை சப்பாணி மலை பகுதியை சேர்ந்த விவசாயி சாமிநாதன் (வயது 58), வாழைப்பூவுடன் வந்து மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலாந்துறை சப்பாணி மலை பகுதியில் பல ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்து வருகிறேன். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக தினமும் அதிகாலை வேளையில் விடிய, விடிய காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்த காட்டு யானைகள் வாழைகளை சேதப்படுத்திவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் வாழை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் வனத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் வந்து பார்த்து நஷ்டஈடு தந்தாலும் அது போதுமானதாக இல்லை. ரூ.6 லட்சம் செலவு செய்து வாழை விவசாயம் மேற்கொண்டதில் சேதமடைந்த வாழைகளுக்கு ரூ.83 ஆயிரம் தான் நஷ்டஈடு கிடைக்கின்றன. எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.
4 வழிச்சாலை
கோவை மாநகரச்சாலை பயனாளர்கள் சங்கம் சார்பாக அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகரின் மேற்கு பகுதிகள் காந்தி பார்க் முதல் கணுவாய் வரை தடாகம் சாலையை 4 வழிச்சாலையாக அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும் தடாகம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இதுதவிர மேட்டுப்பாளையம் சாலை ஜீவா நகர், கே.கே.புதூர் சாலை விரிவாக்கம் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மழைநீர் வடிகால்
கோவை 26-வது வார்டு கவுன்சிலர் சித்தரா வெள்ளியங்கிரி அளித்துள்ள மனுவில், கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் சாலையின் 2 புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதில் 6 அடி இடைவெளியில் மூடிகளை அமைக்க வேண்டும். அப்போது தான் தூய்மை பணியாளர்கள் மழைநீர் வடிகாலை சுத்தம் செய்ய எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
குறைதீர்க்கும் கூட்டத்தில் நேற்று மொத்தம் 322 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.