குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொத்தமங்கலம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கொத்தமங்கலம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கொத்தமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 1-வது வார்டு உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் முறையாக வருவது கிடையாது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீருக்காக சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள வாழ்க்கை மற்றும் தேமங்கலம் பகுதிகளில் சென்று தண்ணீர் எடுத்து வருவதால் சரியான நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம்.
இலவச வீட்டுமனை பட்டா
எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல வேதாரண்யம் அருகே வாய்மேடு பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பழங்குடியின நரிக்குறவர்கள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாடோடிகளாக வாழ்ந்து வரும் எங்கள் குடும்பத்தினர் நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வாய்மேடு கிழக்கு கிராமம் ஓந்ததேவன்காடு பகுதியில் 16 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடம் கிராமத்திலிருந்து கடைசி பகுதியாகவும், மிகவும் தாழ்வான பகுதியாகவும் இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ளம் புகுந்து இயற்கை இடர்பாடுகளால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது.
அடிப்படை வசதிகள்
எனவே எங்களுக்கு வீடு கட்டுவதற்கு ஏதுவாக, அமுதன் குளம் வெட்டப்பட்டு உபரியாக உள்ள மணலை எங்களது வீட்டு மனையை உயர்த்துவதற்கு வழங்க கேட்டுக்கொள்கிறோம். வீட்டுமனையை உயர்த்திக்கொடுத்தால், தற்காலிகமாக குடிசை அமைத்துக்கொள்வோம்.
வாய்மேடு கிழக்கு சேனாதிக்காடு பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தற்காலிகமாக தங்கி உள்ளோம். எங்களுக்கு பட்டா வழங்கி ஓராண்டாகியும், எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. எனவே குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.