குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-மேயரிடம், பொதுமக்கள் மனு

நெல்லையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-03-14 20:04 GMT

நெல்லையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்ஷா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் டேனியல் ஆப்ரகாம், செயலாளர் ஆனந்தராஜ், மாநகர வர்த்தக கூட்டமைப்பு தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் மாநகராட்சிக்கு வந்து கொடுத்த மனுவில், "பெருமாள்புரம் காமராஜர் சாலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்குள்ள பூங்கா மற்றும் கழிவறைகளை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம். தற்போது இந்த பூங்கா மற்றும் கழிவறையை பூட்டி விட்டனர். எனவே அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

தரமான சாலை

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 20-வது வார்டு தலைவர் ஜெய்லானி கொடுத்த மனுவில், "பேட்டை 20-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. 15 ஆண்டுகளாக இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக தரமான சாலை அமைத்து தர வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

தாமிரபரணி திருநெல்வேலி கால்வாய் நயினார்குளம் பாசன சங்க விவசாயிகள் தலைவர் நெல்லையப்பன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், "நயினார்குளம் பாசனத்தை நம்பி 586 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளது. இதற்கு இடையூறாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை தடுக்க வேண்டும். சில இடங்களில் தார்ச்சாலை புதிதாக போடப்பட்டு 3 மாதத்தில் சேதம் அடைந்துவிட்டது. எனவே அவற்றை தரமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நெல்லை ஆனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் கொடுத்த மனுவில், "நெல்லை மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் 360 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அம்மன் கோவிலுக்கு மேற்கே 3 தெருக்கள் உள்ளது. இந்த 3 தெருக்களுக்கும் சேர்த்து தனியாக ஒரு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தெருக்களில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும். ஓடையில் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

நெல்லை மாநகராட்சி 41-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ராதாசங்கர் கொடுத்த மனுவில், "41-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பகிர்மான குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்து தர வேண்டும். எண்டு கப் இருக்கும் இடங்களில் சகதி சேர்வதால் குடிதண்ணீர் சகதி கலந்து வருகிறது. இதனால் நோய் ஏற்படுகிறது. எனவே அந்த கப்புகளை அகற்றிவிட்டு சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே எல்.பெண்ட் அமைத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இலக்கிய வட்டம்

நெல்லை மாநகராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக மைய கட்டிடத்திற்கு தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளை பெயர் வைக்கப்படும் என்பதற்கு முதல்-அமைச்சர், மேயர், துணை மேயர், ஆணையாளருக்கும், கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்து கா.சு.பிள்ளை இலக்கிய வட்டத்தினர் மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை ஜோதிநகர் குடியிருப்பு பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் ஓடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்