மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேர வழிகாட்டும் குழுக்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேர வழிகாட்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-16 20:30 GMT

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேர உதவும் வகையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தலைமையில் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்படுகிறது. இந்த குழுவினர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து கல்லூரியில் சேருவதற்கு உதவி வருகின்றனர். மேலும் உயர்கல்விக்கு வங்கி கடன் பெறுதல், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வியில் சேருதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டுகின்றனர். அதேபோல் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மற்றும் என்ஜினீரியங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கவும் உதவுகின்றனர்.

இதனை கல்வி அதிகாரிகள் தினமும் கண்காணித்து வருகின்றனர். இதையொட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வு முகாமை முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்தாய்வு முகாமில் முதன்மை கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கும் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிளஸ்-2 தேர்வில் 1,297 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்த மாணவ-மாணவிகள் அனைவரையும் துணை தேர்வை எழுத வைக்கவும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளை அழைத்து பேசி துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 550 பேர் துணை தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்