பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்று 3 பவுன் நகை திருட்டு

வேலூரில் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்று நடித்து 3 பவுன் நகை திருடிய நர்சு கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-27 11:15 GMT

நகை திருட்டு

வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் 2-வது தெருவை சேர்ந்தவர் குப்பு (வயது 55). இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 22-ந் தேதி இவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். அவரிடம் தனக்கு மயக்கம் வருவதாக குப்பு கூறினார். உடனே அந்த பெண் நான் நர்சுதான் என்று கூறி முதலுதவி சிகிச்சை அளிக்கிறேன் என்றார். பின்னர் அவர் குப்புவை அவரது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் சென்றதும் குப்பு சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண் குப்பு அணிந்திருந்த 3 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து குப்பு கண்விழித்தார். அப்போது அவரது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நர்சு கைது

இதுகுறித்து அவர் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குப்புவிற்கு முதலுதவி செய்வது போல நடித்து நகையை திருடிச் சென்ற பெண்ணின் உருவம் கேமராவில் பதிவாகி இருந்தது.

அவர் மொபட்டில் அங்கிருந்து சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதன் மூலம் குப்புவிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் அடையாளம் கண்டனர். அவர் பலவன்சாத்துகுப்பம் கலைஞர் நகரை சேர்ந்த வனிதா (39) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் வனிதா பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் நர்சாக பணியாற்றியது தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்