ஆசிரியை வீட்டில் பணம் திருட்டு
வள்ளியூரில் ஆசிரியை வீட்டில் ரூ.1 லட்சம் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் மின்சார வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் கனகராஜ் (வயது 56). இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா (52). இவர் பணகுடி அருகே தளவாய்புரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக ேவலை பார்த்து வருகிறார். ஆண்ட்ரூஸ் கனகராஜ் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மறுநாள் இரவில் வீட்டிற்கு திரும்ப வந்தனர். வீட்டின் கதவை திறந்து பார்க்கும் போது, அறைகள் கதவுகள், பீரோ மற்றும் கபோர்டுகள் திறந்த நிலையில் இருந்தது. பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு போனதை அறித்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வள்ளியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்ததால், மாடி வழியாக சென்ற மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடியுள்ளனர். மேலும் அருகில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அதில் மர்ம நபர்கள் வெள்ளையடித்து சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.