மதுரையில் பசு மாடுகளை திருடி சந்தையில் விற்ற தம்பதி கைது

மதுரையில் பசுமாட்டை திருடி ஒட்டன்சத்திரம் சந்தையில் விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-27 21:46 GMT


மதுரையில் பசுமாட்டை திருடி ஒட்டன்சத்திரம் சந்தையில் விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் பசு மாடு திருட்டு

மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு கட்டப்பட்டிருக்கும் பசுமாடுகளை திருடும் கும்பல் நகரில் வலம் வந்தது. அதில் குறிப்பாக எஸ்.எஸ்.காலனி, செல்லூர், கூடல்புதூர், அலங்காநல்லூர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான பசு மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள் போன்றவை திருடப்பட்டு வெளிமாவட்டங்களில் விற்கப்பட்டது. அதனை கடத்தி சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். அதன்பின்னரும் மாடு கடத்தும் சம்பவம் நடந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.காலனி, தாமஸ் காலனியை சேர்ந்தவர் பெரியமுத்து (வயது 39). இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று பசுமாட்டை அவரது மாமாவின் இடத்தில் கட்டி வைத்திருந்தார். அங்கிருந்த பசுமாட்டை காணவில்லை. இது தொடர்பாக அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாட்டை திருடியவர்களை தேடி வந்தனர்.

தம்பதி கைது

அதே நேரத்தில், மாட்டின் உரிமையாளர் பெரிய முத்துவும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது பசுமாட்டை தேடி வந்தார். மேலும் மாட்டுச் சந்தைகள் நடைபெறும் இடங்களுக்கு சென்றும் தேடினார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தைக்கும் சென்று பார்த்துள்ளார். அங்கு ஒரு பெண்ணும், ஆணும் அவருடைய மாட்டை இன்னொருவருக்கு விற்பனை செய்து கொண்டிருப்பதை கண்டார். உடனே அவர்கள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிழக்கு தெரு குன்னத்தூரை சேர்ந்த பெரியசாமி (38), அவருடைய மனைவி சத்யா(34) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் பெரியமுத்துவின் மாடு திருட்டு போன அதே நாளில் அதே பகுதியில் விஷ்ணு என்பவரின் மாடும் திருடப்பட்டிருந்தது. அவரும் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்திருந்தார். அந்த வழக்கு குறித்தும் போலீசார் பிடிபட்ட தம்பதியினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்