குலதெய்வ கோவிலில் 17 சிலைகளை பெயர்த்து எடுத்து புதரில் மறைத்த கும்பல்
குலதெய்வ கோவிலில் 17 சிலைகளை பெயர்த்து எடுத்து புதருக்குள் மறைத்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
குலதெய்வ கோவிலில் 17 சிலைகளை பெயர்த்து எடுத்து புதருக்குள் மறைத்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெயர்த்து எடுத்த சிைலகள்
ராமாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே புதுக்குளம் கிரமத்தில், காட்டுப்பகுதியில் தர்ம முனீசுவரர் கோவில் அமைந்துள்ளது.
முத்துமுனியாண்டி சாமி, கருப்பணசாமி, செண்பகவள்ளி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் பீடங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளன.
இந்த கோவிலில் மாசி களரி திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் வந்து சாமி கும்பிடுவது வழக்கம். புதுக்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களின் குலதெய்வமாக பழமை வாய்ந்த இந்த கோவில் விளங்குகிறது.
இந்த கோவில் வளாகத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்தனர். பின்னர் பைரவர், ராக்காயி அம்மன், இருளாயி அம்மன், செண்பக வள்ளி அம்மன், பூலோகம் காத்த அம்மன் உள்ளிட்ட 17 சாமி சிலைகளை பெயர்த்து எடுத்துள்ளனர்.
முட்புதர்கள் சூழ்ந்த பகுதியில் கூரை கொட்டகையின் கீழ் அந்த சிலைகளை போட்டு, அதன் மீது ஓலையை வைத்து மறைத்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
பக்தர்கள் அதிர்ச்சி
நேற்று காலை கோவிலுக்கு வந்தவர்கள், கோவிலில் உள்ள பரிவார தெய்வ சிலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஊர்மக்கள் திரண்டனர்.
பின்னர் அனைவரும் தேடிய போது, சிலையை மறைத்து வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து திருஉத்தரகோசமங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் மேற்கண்ட கோவிலின் நிர்வாகத்தில் தனக்கும் பங்கு உள்ளது என்று அந்த பகுதியை சேர்ந்த ஒருவரும், மதுரையை சேர்ந்த ஒருவரும் பிரச்சினை செய்து வந்ததாகவும், அதன் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு, சிலைகளை பெயர்த்து எடுத்து புதரில் மறைத்த கும்பலை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.