அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி கடன் சுமை

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Update: 2023-04-24 22:03 GMT

நாகர்கோவில்:

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து அவருக்கு கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் புத்தகம் மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் கடும் கடன் சுமையில் இருந்து வருகிறது. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளது. டீசல் விலை உயர்வால் அண்டை மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தில் தமிழக அரசு எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

ரூ.48 ஆயிரம் கோடி கடன்

போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்கனவே ரூ.48 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது. இந்த கடன் சுமையை முழுமையாக தீர்க்க முடியாவிட்டாலும், தற்போது ஏற்பட்டு வரும் கடன் சுமையை தீர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ்களில் விளம்பரம் செய்தல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உதவியுடன் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தினசரி நஷ்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜெர்மன் வங்கியின் நிதி உதவியோடு தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 500 பஸ்கள் வாங்கப்படுகின்றன. அதில் 100 பஸ்கள் சென்னையிலும், மீதமுள்ள பஸ்கள் பெரும் நகரங்களிலும் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் விடும் பணி நடக்கிறது. தமிழகம் முழுவதும் 1,500 பஸ்கள் 15 வருடத்திற்கு மேல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மத்திய அரசுடன் நடந்த போக்குவரத்து கழக பேச்சுவார்த்தையில் இந்த 1,500 பஸ்களையும் ஒன்றரை ஆண்டு காலம் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளேன்.

2,000 புதிய பஸ்கள்

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் இத்தகைய கோரிக்கையை முன் வைத்துள்ளன. இதற்கான காரணம் கடந்த கொரோனா காலத்தில் பஸ்கள் ஓடவில்லை. கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்த கோரிக்கையை முன் வைத்தோம்.

மேலும் தமிழகத்திற்கு புதிதாக 2,000 பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் நடைபெற இருக்கிறது. குறிப்பாக 15 வருடத்திற்கு மேல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த 1,500 பஸ்களை நிறுத்தினால் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் போக்குவரத்து பாதிக்கும். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே புதிய பஸ்கள் வாங்கும் வரை 1,500 பஸ்களுக்கு கால அவகாசம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பிரச்சினைக்கு தீர்வு

போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள பேச்சுவார்த்தை நல்ல முறையில் முடிவு பெற்றுள்ளது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 4 முறை பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. முன்பு இருந்ததை விட தற்போது ஊழியர்களுக்கு பல்வேறு படிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணபலன்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக பணியின் ஓய்வு வயதை 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தப்பட்டது.விருப்ப ஓய்வு மற்றும் பணி நிறைவு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முதற்கட்டமாக ரூ.250 கோடியும், அடுத்தபடியாக ரூ.350 கோடியும் தமிழக முதல்-அமைச்சர் வழங்கி இருக்கிறார். மேலும் ரூ.1,500 கோடியும் அரசு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு வருகிறது. போக்குவரத்து கழகங்களை இணைப்பது குறித்த எந்த ஒரு ஆய்வும் தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், அரசு வக்கீல் மதியழகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின், தொ.மு.ச. நிர்வாகிகள் கண்ணன், சிதம்பரம், சிவன் பிள்ளை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்