வக்கீல்களுக்கு இடையே மாநில அளவில் கபடி போட்டி: மதுரை மாவட்ட கோர்ட்டு அணிக்கு முதல் பரிசு
வக்கீல்களுக்கு இடையே மாநில அளவிலான கபடி போட்டியில் மதுரை மாவட்ட கோர்ட்டு அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
வக்கீல்களுக்கு இடையே மாநில அளவிலான கபடி போட்டியில் மதுரை மாவட்ட கோர்ட்டு அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
மாநில அளவிலான கபடி போட்டி
மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கங்கள் இணைந்து நடத்திய ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வக்கீல்களுக்கு இடையிலான மாநில அளவிலான கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டிகளை ஐகோர்ட்டு நீதிபதிகள் புகழேந்தி, ஸ்ரீமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் தலைமை தாங்கினார்.
மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஆண்டிராஜ், சீனிவாச ராகவன், ஆனந்த வள்ளி, சுரேஷ், ராமகிருஷ்ணன், அன்பரசு, கே.பி.நாராயண குமார், கிருஷ்ணவேணி, வெங்கடேசன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்பரிசு
இந்த போட்டியில் 24 மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் ஏ, பி என ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 அணிகள் வீதம் பங்கேற்றன. 2 நாட்கள் நடந்த இந்த போட்டிகளில் முடிவில், முதல் பரிசை மதுரை மாவட்ட கோர்ட்டு அணி பெற்றது.
இந்த அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதே போல 2-ம் பரிசை மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் அணி பெற்றது. இதற்காக அந்த அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மூன்றாம் பரிசை தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களின் வக்கீல்கள் அணிகள் பெற்றன.
பரிசுகளை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் வழங்கி அணியினரை பாராட்டினார். நிகழ்ச்சியில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் வக்கீல்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கங்கள் விளையாட்டு குழுவை சேர்ந்த நடராஜன், மோகன் காந்தி, மகேந்திரபதி, எஸ்.வினோத் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.