பொள்ளாச்சியில் மாநில அளவிலான கலைத்திருவிழா:கலைப் போட்டிகளில் மாணவ-மாணவிகள் அசத்தல்
பொள்ளாச்சியில் 2 இடங்களில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகள் அசத்தினார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 2 இடங்களில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகள் அசத்தினார்கள்.
கலைத்திருவிழா
மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்த பள்ளி, கல்வி துறை மூலம் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகள், வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி மற்றும் திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிகளில் மாநில அளவிலான கலைத்திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாணவ-மாணவிகளின் தனி நபர் மற்றும் குழு நடனங்கள் நடைபெற்றது. போட்டிகளை கோவையில் இருந்து வந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
நாட்டுபுற கலைகள்
பொள்ளாச்சியில் இரு இடங்களில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500 மாணவ-மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கிராமப்புற, நாட்டுப்புற கலைகள், பறை இசை, உரும்பி போன்ற இசை கருவிகளை கொண்டு தனி நடனம், குழு நடனங்கள் நடைபெற்றது.
9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். போட்டிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளை பள்ளி, கல்வித்துறை மூலம் விமானத்தில் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.