மாநில டபுள் டிராப் துப்பாக்கி சுடும் போட்டி: புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் கோப்பையை வென்றது
மாநில டபுள் டிராப் துப்பாக்கி சுடும் போட்டியில் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் கோப்பையை வென்றது.
துப்பாக்கி சுடும் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ஆவாரங்குடிப்பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 48-வது ஆண்டு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. இதனை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
டபுள் டிராப் போட்டி
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக டபுள் டிராப் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு டபுள் டிராப் போட்டியில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு கோப்பையை வழங்கினார்.
பின்னர் ராஜகோபால தொண்டைமான், பிரித்திவிராஜ் தொண்டைமான், ராதாநிரஞ்சனி, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவந்தி ஆதித்தனார் கோப்பை
இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் கோப்பை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.