பெண் குழந்தைக்கான மாநில விருது விண்ணப்பிக்க 15-ந்தேதி கடைசி நாள்

பெண் குழந்தைக்கான மாநில விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-09 18:45 GMT


தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல், மேலும் வேறு ஏதாவது வகையில் சிறப்பான செயல்கள் மற்றும் தனித்துவமான சாதனைகள் செய்திருத்தல் போன்றவைகளில் வீரதீர செயல் புரிந்து வரும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், அதற்கான மாநில விருது ஆண்டுதோறும் இந்த சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

15-ந்தேதி கடைசி நாள்

அதேபோல், வருகிற ஜனவரி 2023-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்க 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2022-ன் படி) தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒகுவதி), காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவரது உரிய முன் மொழிவுகளை மாவட்ட சமூக நல அலுவலர், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம், மெயின் ரோடு, கடலூர் என்ற முகவரியில் வருகிற 15-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும் மாவட்டங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு 24.1.2023 அன்று மாநில விருது வழங்கப்படும். ஆகவே வீர, தீர செயல்புரிந்து வரும் பெண் குழந்தைகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்