நெல்லையில் மாநில தடகள போட்டி; வீரர்-வீராங்கனை புதிய சாதனை
நெல்லையில் நடைபெற்று வரும் மாநில தடகள போட்டியில் வீரர்-வீராங்கனை புதிய சாதனை படைத்தனர்.
நெல்லையில் நடைபெற்று வரும் மாநில தடகள போட்டியில் வீரர்-வீராங்கனை புதிய சாதனை படைத்தனர்.
நடை போட்டி
நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், மாநில தடகள போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 23 வகையான போட்டிகள் நடக்கின்றன. முதல் நாள் போட்டியில் 2 சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
அதாவது 20 கிலோ மீட்டர் நடை போட்டியில் ஏற்கனவே விகாஸ்சிங் என்பவர் 1 மணி நேரம் 31 நிமிடம் 20 வினாடிகளில் கடந்து சாதனை படைத்து இருந்தார். இந்த நிலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த வீரர் செர்வின் என்பவர் 20 கி.மீ. நடைபோட்டியில் 1 மணி நேரம் 29 நிமிடங்கள் 16 வினாடிகளில் எல்லையை கடந்து புதிய சாதனை நிகழ்த்தினார்.
கம்பு ஊன்றி தாண்டுதல்
இதேபோல் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் முந்தைய சாதனை சமன் செய்யப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு வீராங்கனை பவித்ரா என்பவர் கம்பு ஊன்றி 4.10 மீட்டர் உயரம் தாண்டி சாதனையை பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயைச் சேர்ந்த வீராங்கனை பரானிகா என்பவர் கம்பு ஊன்றி 4.10 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனையை சமன் செய்துள்ளார்.
நேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டி ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தகுதிச்சுற்று
போட்டிகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம், துணைத் தலைவர் அன்பழகன்எம்.எல்.ஏ., செயலாளர் லதா, நெல்லை மாவட்ட தடகள சங்க தலைவர் செய்யது நவாஸ், செயலாளர் சேது, பொருளாளர் பால்பாண்டி உள்ளிட்டோர் நடத்தினர்.
போட்டிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போட்டிகள், தேசிய போட்டிக்கு தகுதிச்சுற்று போட்டியாகவும் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பான தகுதியை பெறுவோர் தேசிய அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.