கோடை உழவு பணி தொடக்கம்
எட்டயபுரம் பகுதியில் விவசாயிகள் கோடை உழவுபணியை தொடங்கி உள்ளனர். நிலங்களை சட்டி கலப்பை கொண்டு உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பகுதியில் விவசாயிகள் கோடை உழவுபணியை தொடங்கி உள்ளனர். நிலங்களை சட்டி கலப்பை கொண்டு உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை உழவு
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் உள்ளன. பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமியாகும். ஆண்டுக்கொருமுறை பெய்யக்கூடிய பருவமழையை நம்பி மட்டுமே கோடைகாலமான புரட்டாசி ராபி பருவத்தில் விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். இந்த வகையில் எட்டயபுரம் பகுதி விவசாயிகள் புரட்டாசி ராபி பருவத்திற்கு, தங்கள் நிலங்களை கடந்த ஒரு மாத காலமாக சட்டி கலப்பை உழவு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.
சட்டி உழவு முடிந்து 20 நாட்கள் கழித்து பல்கலப்பை உழவு செய்யப்படும். சில கிராமங்களில் மாடுகளை கொண்டும் உழவு செய்கின்றனர்.
பயிர்கள் நன்கு செழிப்பாக வளர்ந்து கதிர் திரட்சியாக மணி பிடிக்கவும், பயிர்களுக்கு நன்மை செய்யக்கூடிய மண்புழுக்கள் இனப் பெருக்கத்தை அதிகப்படுத்தவும், ஆட்டுக் கிடை மற்றும் மாட்டுக் கிடை போட்டும், சில விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் கால்நடை சானங்களை சேமித்து வைத்து இயற்கை உரங்களாக நிலங்களுக்கு எடுத்து சென்று கோடை உழவில் அதை தூவுவார்கள்.
ரசாயன உரம்
கால்நடைகள் பல ஆண்டுகளாக குறைந்து வருவதால் ரசாயனஉரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய நிலை சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அடி உரம் டி.ஏ.பி.க்கு விதைப்பு சமயத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் உரம் கிடைக்காமல் கடந்த காலங்களில் விவசாயிகள் சிரமப்பட்டனர்.
ராபி பருவத்திற்கு இன்னும் 3 மாத காலமே உள்ளது. இந்த ஆண்டு உரத்தட்டுப்பாடு ஏற்படாமலும், உர விற்பனையில் முறைகேடுகள் நடைபெறாமலும் சம்மந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.