வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
முதுமலையில் முதல் முறையாக வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கி உள்ளனர்.
கூடலூர்,
முதுமலையில் முதல் முறையாக வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கி உள்ளனர்.
கணக்கெடுப்பு பணி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பு மற்றும் பிந்தைய காலக்கட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் நடமாட்டமும் பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், துணை இயக்குனர்கள் வித்யா, அருண் ஆகியோர் தலைமையில் முதுமலையில் உள்ள அனைத்து சரகங்களின் வனப்பகுதியில் முதன் முறையாக வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு பணி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த பணியில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் என தலா 6 பேர் கொண்ட 16 குழுக்கள் ஈடுபட்டு உள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
முன்னதாக வண்ணத்துப்பூச்சிகளை கணக்கெடுப்பது குறித்த செயல்முறை விளக்க பயிற்சி வன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணி வரை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
உயிர் சூழல் மண்டலத்தில் வண்ணத்துப்பூச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. பனி மற்றும் கோடை காலம் தொடங்கி விட்டதால் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மோனார்க் உள்பட பல வகைகளான வண்ணத்துப்பூச்சிகள் வனப்பகுதியில் உள்ளன. இதனால் முதன் முறையாக புலிகள் காப்பகத்தில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டு 2 நாட்கள் நடக்கிறது.
கணக்கெடுப்புக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சி இனங்கள் குறித்த முழு தகவல்கள் சேகரிக்கப்பட்டு துறை ரீதியாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 -வது நாளாக கணக்கெடுப்பு பணி நடக்கிறது.