முடங்கியுள்ள செங்கல்சூளை தொழில்

செங்கல்சூளைக்கு மண் எடுக்க தடை எதிரொலியாக செங்கல்சூளை தொழில் முடங்கியுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-07-08 21:28 GMT

ஆரல்வாய்மொழி:

செங்கல்சூளைக்கு மண் எடுக்க தடை எதிரொலியாக செங்கல்சூளை தொழில் முடங்கியுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்சூளை தொழில்

குமரி மாவட்டத்தில் செங்கல்சூளை தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஆரல்வாய்மொழி, மார்த்தால், தோவாளை, செண்பகராமன்புதூர், ராமனாதிச்சன்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆரல்வாய்மொழி பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் உள்ளன.

இதை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தொழிலுக்கு மூலப்பொருளே மண் ஆகும். ஆரம்ப காலத்தில் தங்கு தடையின்றி கிடைத்த இம்மண் தற்போது கானல்நீராகிவிட்டது.

மண் எடுக்க தடை

அதிலும் குமரி மாவட்டத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அரசு தடை விதித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தடை நீடித்து வருவதால், அருகில் உள்ள நெல்லை மாவட்டம் பழவூரிலிருந்து மண்ணை விலைக்கு வாங்கி செங்கல்சூளை உரிமையாளர்கள் தொழிலை நடத்தி வந்தனர். அதற்கும் 2 ஆண்டுகளுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக செங்கல்சூளை தொழில் முடங்கி உள்ளது. இதனால் செங்கல் சூளை நடத்தி வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். சிலர் ஏற்கனவே இருப்பு இருந்த மண்ணை வைத்து தொழில் நடத்திவந்தனர். அந்த மண் தீர்ந்தவுடன் அவர்களும் சூளையை மூடிவிட்டனர்.

இப்படி தொடர்ந்து செங்கல்சூளைகள் மூடப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால், ஆரல்வாய்மொழியில் 500 சூளைகள் செயல்பட்டு வந்த இடத்தில் தற்போது 100 செங்கல்சூளைகளே இயங்கி வருகிறது. அதுவும் படிப்படியாக மூடப்படுவதால், செங்கல்சூளை தொழில் முடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சொந்த ஊருக்கு புறப்பட்டனர்

பெரும்பாலான செங்கல்சூளைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் பலர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். மற்றவர்கள் இங்கு வேலை இல்லாமால் பட்டினியால் வாடுகின்றனர். இதனால் செங்கல்சூளை தொழிலை தடையின்றி நடத்த மண் எடுக்க அனுமதி கேட்டு போராட்டங்களும் நடைபெற்றது. இருப்பினும் இன்றுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவ்வப்போது தொண்டுநிறுவனங்கள் நிவாரணம் வழங்கி வருகிறது. இந்த வகையில் செண்பகராமன்புதூர் பகுதியில் செங்கல்சூளைகளில் தங்கி வேலை செய்துவரும் வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோருக்கு அனந்தபத்மநாபபுரத்தில் செயல்பட்டுவரும் யூனிக்கோ தொண்டுநிறுவனம் சார்பில் அறுசுவையுடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அதன் இயக்குனர் சிவராமன், செண்பகராமன்புதூர் பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் யூனியன் கவுன்சிலர் தர்மர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்