கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்:விழுப்புரத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதை கண்டித்து விழுப்புரத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-06-14 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் கரீப் பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அறுவடை தொடங்கியது. இதையொட்டி 46 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது அறுவடை படிப்படியாக குறைந்து வருவதாக கூறி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடும் நடவடிக்கையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

நெல் மூட்டைகள் தேக்கம்

இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுவதில்லை. இ தனால், திடீரென பெய்யும் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து வீணாகி விடுகிறது என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலக அதிகாரிகளை சந்திக்க விவசாயிகள், நேற்று முன்தினம் மாலையில் வந்தனர். ஆனால் அதிகாரிகள், துறை சார்ந்த கூட்டம் நடத்திக்கொண்டிருந்ததால் விவசாயிகளை சந்திக்கவில்லை.

விவசாயிகள் சாலை மறியல்

இதனால் வெகுநேரம் காத்திருந்த விவசாயிகள் ஆத்திரமடைந்து திடீரென நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சற்குணம், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், நாங்கள் பதிவு செய்த நெல்லுக்கு உரிய ரசீது வழங்கப்படவில்லை, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யவில்ைல. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. தற்போது சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அந்த நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இப்பிரச்சினையில் வேளாண் துறை அதிகாரிகளும், நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளும் தலையிட்டு உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். அதேநேரத்தில் மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் விவசாயிகள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 27 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்