சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தம்: பயன்படாத 3 விமானங்களை அகற்ற நடவடிக்கை
சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள பயன்படாத 3 பழைய விமானங்களை அகற்ற இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன் என்.இ.பி.சி., கிங்பிஷர், ஜெட் ஏா்வேஸ், டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய நிறுவன விமான சேவை இயங்கி வந்தன. இதில் என்.இ.பி.சி., கிங்பிஷா், ஜெட் ஏா்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் 12 பயன்படுத்தப்படாத விமானங்கள் சென்னை விமான நிலைய வடமேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் என்.இ.பி.சி., விமானங்கள் 4, ஜெட் ஏர்வேஸ் விமானம் 1 உள்ளிட்ட 5 விமானங்கள் கடந்த 2021-ம் ஆண்டு முறைப்படி தமிழ்நாடு அரசின் வருவாய்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு, அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தன.
இந்த நிலையில், தற்போது தனியார்களுக்கு சொந்தமான 3 பழைய விமானங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த உபயோகத்தில் இல்லாத பழைய விமானங்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக 2012-ம் ஆண்டு முதல் விமான நிறுத்தக் கட்டணம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இதனால் சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள இந்த விமானங்கள் அகற்றப்படுவதால் மற்ற விமானங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதிகள் கிடைக்கும். இது சம்பந்தமாக தனியார் விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பாட்டில் இல்லாத பழைய விமானங்களை அகற்றுவது தொடர்பாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், இது சம்பந்தமாக அந்தந்த விமான நிறுவன நிர்வாகிகள் வருகின்ற 10-ந்தேதி விமான நிறுவன நிர்வாகிகள் சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, இந்த விமானங்களை எத்தனை நாட்களில் அகற்ற இருக்கின்றனர் என்று உறுதி மொழியை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய விமான நிலைய ஆணையமே, நேரடியாக இந்த 3 பழைய விமானங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.