சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் லதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். இதைப்போல கொள்ளிடத்தில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.