எஸ்.டி.ஏ.டி. அணிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி
எஸ்.டி.ஏ.டி. அணிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி (எஸ்.டி.ஏ.டி.) அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி, நெய்வேலி, ஊட்டி, கிருஷ்ணகிரி, சிவகங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. `லீக்' அடிப்படையில் நடக்கும் இந்த போட்டியின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் திருச்சி அணி, நெய்வேலியை எதிர்கொண்டு விளையாடியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடிய நெய்வேலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சியை தோற்கடித்தது. மற்ற போட்டிகளில் நீலகிரி 3-0 என்ற கோல் கணக்கில் சிவகங்கை அணியையும், 2-0 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரி அணியையும் தோற்கடித்தது. மேலும் ஒரு ஆட்டத்தில் நெய்வேலி அணி 6-1 என்ற கோல் கணக்கில் சிவகங்கை அணியை வீழ்த்தியது. இன்று (திங்கட்கிழமை) 3-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன. போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கோவையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4 முதல் 9-ந் தேதிவரை நடைபெற உள்ள கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெறும்.