கணக்காளருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
சிவகிரி அருகே ஊர் கணக்குகளை கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கணக்காளருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரி அமிர்த விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கையா (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள சமுதாயத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரும், சமுதாய தலைவருமான வனமூர்த்தியும் சமுதாய மண்டபத்தில் அமர்ந்து மாத சந்தா கணக்குகளை சரிபார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சமுதாய பொருளாளரான சின்ன வேலுச்சாமி (41) ஊர் கணக்குகளை ஒப்படைக்குமாறு கூறினார். இதனால் அவருக்கும், கணக்காளர் சங்கையாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சின்ன வேலுச்சாமி, அவருடைய அண்ணன் நல்லையா (45), மற்றொரு நல்லையா (50) ஆகிய பேரும் சேர்ந்து சங்கையாவை தாக்கி, கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சங்கையாவுக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னவேலுச்சாமி உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.