சுவர் ஏறி குதித்து இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்

சுவர் ஏறி குதித்து இளம்பெண்ணை குத்திக்கொன்ற கணவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.

Update: 2023-06-03 18:45 GMT

ராஜபாளையம், 

சுவர் ஏறி குதித்து இளம்பெண்ணை குத்திக்கொன்ற கணவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாற்றுத்திறனாளி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டியை அடுத்துள்ள ஒத்தப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மதிமன்னன் (வயது 28). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அத்தை மகள் பிரியாவுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த 6 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மதிமன்னனை விட்டு பிரியா பிரிந்தார்.

அதே பகுதியை சேர்ந்த பாண்டிச்செல்வி (22) என்பவரை மதிமன்னன் 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

மதிமன்னன், சுமை தூக்கும் வேலைக்கு சென்று வந்தார். ேமலும் அவர் மது குடித்துவிட்டு வந்து பாண்டிச்செல்வியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குத்திக்கொலை

ஒரு வாரத்துக்கு முன்பு பாண்டிச்செல்வியின் பாட்டி இறந்த நிலையில் அவரது வீட்டுக்கு சென்று இருந்தார். இந்தநிலையில் நேற்று மதிமன்னன், பாண்டிச்செல்வி இருந்த வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றார்.

பாண்டிச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த மதிமன்னன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாண்டிச்செல்வியை கழுத்து, வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடினார்.

படுகாயம் அடைந்த பாண்டிச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டிச்செல்வி உடலை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எழுத்து மூலம் விசாரணை

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிமன்னனை கைது செய்தனர். அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் மதிமன்னனிடம் போலீசார் எழுத்து மூலமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தப்பி ஓடினார்

இதற்கிடையே மதிமன்னனை சிறையில் அடைப்பதற்கு முன்பாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் மதிமன்னன் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கழிப்பறைக்கு அழைத்து சென்றனர். அப்போது மதிமன்னன் ஆஸ்பத்திரியின் பின்பக்கம் வழியாக சுவர் ஏறிகுதித்து தப்பி சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கழிவறையில் தேடி பார்்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் தப்பி ஓடியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தப்பி ஓடிய மதிமன்னனை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்