வாலிபருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
வேப்பனப்பள்ளி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜி கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது31). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளியில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே எட்டரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி கோவிந்தராஜ்(34), சென்னையை சேர்ந்த இவரது நண்பரான தனியார் நிறுவன ஊழியர் தமிழ் (27) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்கள் 3 பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சின்ன கொத்தூர் கிராமத்தின் அருகே சென்றபோது மதுபோதையில் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது தமிழ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனின் கழுத்தில் குத்தினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முருகேசன் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ், தமிழ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.