மருமகளிடம் அடிக்கடி பேசியதை கண்டித்த மாமனாருக்கு கத்திக்குத்து-தபால்காரரை போலீஸ் தேடுகிறது

மருமகளிடம் அடிக்கடி பேசியதை கண்டித்த மாமனாருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தபால்காரரை போலீஸ் தேடுகிறது.

Update: 2022-08-14 22:26 GMT

மேச்சேரி:

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தபால்காரர்

மேச்சேரி அருகே கச்சராயனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70), இவருடைய மருமகள் ஒருவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த தபால்காரர் செந்தில்குமார் (40) என்பவர் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கிருஷ்ணன், தன்னுடைய மருமகளை கண்டித்தார். மேலும் செந்தில்குமாரிடம், என்னுடைய மருமகளிடம் அடிக்கடி ஏன்பேசுகிறாய் என்று கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் செந்தில்குமாருக்கும், கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது.

கத்திக்குத்து

நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், கிருஷ்ணனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் குடல் சரிந்து கிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிருஷ்ணனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்