புனித செபஸ்தியார், இறை இரக்கத்தின் மாதா ஆலய தேர் பவனி
குமரபட்டி, கீழப்பண்ணையில் புனித செபஸ்தியார், புனித இறை இரக்கத்தின் மாதா ஆலயத்தின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆவூர்:
புனித செபஸ்தியார் ஆலயம்
விராலிமலை தாலுகா, மேலபச்சகுடி ஊராட்சிக்குட்பட்ட குமரபட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்பவனி விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதை முன்னிட்டு அன்று மாலை 6.30 மணியளவில் ஆலயத்தில் பாத்திமாநகர் பங்குத்தந்தை கபிரியேல் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி ஆலயத்தின் முன்பு கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நேற்று ஆலயத்தில் பல்வேறு பங்கு தந்தையர்கள் கலந்துகொண்டு திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
தேர் பவனி
இதையடுத்து இரவு 7 மணியளவில் மலர்மாலைகள், தோரணங்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் மற்றும் மாதா சொரூபங்கள் பொருத்தப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. தேர் மேளதாளம், அதிர்வேட்டு, வாணவேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணியளவில் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் தொடர்ச்சியாக இன்று மாலை ஆலயத்தில் தென்னிலைப்பட்டி அருட்தந்தை கிறிஸ்துராஜா கலந்துகொண்டு கொடியிறக்கம் மற்றும் திருப்பலி நிறைவேற்றி வைத்தார். விழாவில் குமரபட்டி, பாத்திமாநகர், மேலபச்சகுடி, செவந்தியானிபட்டி, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, புனித செபஸ்தியார் அன்பியம் மற்றும் குமரபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
புனித இறை இரக்கத்தின் மாதா ஆலயம்
குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கீழப்பண்ணையில் புனித இறை இரக்கத்தின் மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் மாலை வேளையில் பல்வேறு பங்குத்தந்தையர்கள் கலந்துகொண்டு திருப்பலியாற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்று இரவு ஆலயத்தில் நசரேத் அருட்தந்தை தேவராஜ் மற்றும் பங்குத்தந்தை ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
திரளான கிறிஸ்தவர்கள்
இதையடுத்து இரவு ஒரு மணி அளவில் மலர் மாலை தோரணங்கள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 2 தேர்களில் புனித இறை இரக்கத்தின் மாதா மற்றும் உயிர்த்த ஆண்டவரின் சொரூபங்கள் பொருத்தப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. தேரானது மேளதாளம், அதிர்வேட்டு, வாணவேடிக்கைகள் முழங்க வீதி உலா வந்து இன்று காலை 6 மணியளவில் நிலையை அடைந்தது. தொடர்ந்து நேற்று மாலை ஆலயத்தில் திருப்பலி மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கீழப்பண்ணை, குன்னத்தூர், ஆலம்பட்டி, நாகமங்கலம், கலிமங்களம் நசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கீழப்பண்ணை கிராம மக்கள் செய்திருந்தனர்.