எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தற்கொலை

வேலூர் அருகே எஸ்.எஸ்.எல்.சி. மறு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-19 17:39 GMT

மறு தேர்வில் தோல்வி

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அன்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சுமதி. கணவரை இழந்த அவர் கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவரது மகன் சுரேஷ்ராஜா (வயது 16). கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அதையடுத்து அவர் தோல்வி அடைந்த பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்காக தயாராகி வந்தார்.

அந்த சமயத்தில் கேட்டரிங் சர்வீஸ் வேலைக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். இந்த நிலையில் சுரேஷ்ராஜா கடந்த மாதம் எஸ்.எஸ்.எல்.சி. மறுதேர்வு எழுதினார். அதன்முடிவுகள் நேற்று வெளியானது. மறுதேர்விலும் அவர் தேர்ச்சி அடையவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

அதனால் மனமுடைந்த சுரேஷ்ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள் இதைக்கண்டு விரிஞ்சிபுரம் போலீஸ் மற்றும் அவருடைய அம்மா சுமதிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதை யடுத்து வேலைக்கு சென்ற சுமதி உடனடியாக வீட்டிற்கு வந்து சுரேஷ் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. மறுதேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்