நீலகிரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது
நீலகிரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. 327 பேர் தேர்வு எழுத வரவில்லை.
ஊட்டி
நீலகிரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. 327 பேர் தேர்வு எழுத வரவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 3,685 மாணவர்கள் மற்றும் 3,726 மாணவிகள் என மொத்தம் 7,411 பேர் எழுத தகுதி பெற்றனர். முதல் நாளான நேற்று தமிழ் தேர்வில் 7,071 பேர் கலந்து கொண்டனர். 327 பேர் தேர்வு எழுதவில்லை. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் 131 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 116 பேர் கலந்து கொண்டனர். 15 பேர் வரவில்லை.
பறக்கும் படை
இதற்காக 59 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தேர்வு பணியில் 62 முதன்மை கண்காணிப்பாளர்கள், 62 துறை அலுவலர்கள், 140 அலுவலக பணியாளர்கள், 625 அறை கண்காணிப்பாளர்கள், 23 வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் என 912 பேர் ஈடுபட்டு இருந்தனர்.
இதேபோன்று மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 88 பேர் அடங்கிய பறக்கும் படை குழுவினர் தாலுகா வாரியாக தேர்வு மையங்களில் சோதனை செய்தனர். இதேபோல் மாணவ-மாணவிகளுக்கான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.