எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 87.85 சதவீதம் பேர் தேர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 87.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை வகித்தனர்.
87.85 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 375 மாணவர்கள் எழுதியதில் 9 ஆயிரத்து 381 பேரும், 11 ஆயிரத்து 85 மாணவிகளில் 10 ஆயிரத்து 350 பேரும் என மொத்தம் 22 ஆயிரத்து 460 பேரில் 19 ஆயிரத்து 731 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 87.85 சதவீதமாகும். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்தனர்.
கல்வி மாவட்டம் வாரியாக அறந்தாங்கியில் 3 ஆயிரத்து 778 மாணவர்களில் 3 ஆயிரத்து 289 மாணவர்களும், 3 ஆயிரத்து 664 மாணவிகளில் 3 ஆயிரத்து 506 பேரும் என மொத்தம் 7 ஆயிரத்து 442 பேரில் 6 ஆயிரத்து 795 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 91.31 சதவீதமாகும். இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 3,297 மாணவர்களில் 2,642 பேரும், 3,189 மாணவிகளில் 2,913 பேரும் என மொத்தம் 6,486 பேரில் 5,555 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.65 சதவீதமாகும்.
69 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 300 மாணவர்களில் 3,450 பேரும், 4,232 மாணவிகளில் 3,931 பேரும் என மொத்தம் 8,532 பேரில் 7,381 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 86.51 சதவீதமாகும். தேர்வு முடிவுகள் வெளியானதை மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் பார்த்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 215 அரசுப்பள்ளிகளில் 18 அரசுப்பள்ளிகளும், 31 உதவி பெறும் பள்ளி, பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 2 பள்ளிகளும், 11 சுயநிதிப்பள்ளிகளில் 4 பள்ளிகளும், 72 மெட்ரிக் பள்ளிகளில் 45 மெட்ரிக் பள்ளிகளும் என 69 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. புதுக்கோட்டை மாவட்டம், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 87.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 32-வது இடத்தை பிடித்தது.