எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வுக்கு வராத 775 மாணவ-மாணவிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வுக்கு வராத 775 மாணவ-மாணவிகளை, பொதுத்தேர்வு எழுத வரும்படி அழைத்துவர 170 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2023-03-30 16:21 GMT

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து தேர்வு எழுதாத மாணவர்களின் வீட்டுக்கு சென்று ஆசிரியர்கள் குழுவினர் அழைத்தனர். அதில் ஒருசில மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதால் தேர்வு எழுத மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே வருகிற 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இதில் பிளஸ்-2 தேர்வை போன்று அல்லாமல் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைப்பதற்கு முயற்சி நடக்கிறது. இதற்காக பள்ளிக்கு முறையாக வராத மாணவ-மாணவிகளை கண்டறிந்து உரிய பயிற்சி அளிக்கும்படி கல்வித்துறை உத்தரவிட்டது.

775 மாணவ-மாணவிகள்

இந்த நிலையில் கடந்த வாரம் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு முதல்கட்ட செய்முறை தேர்வு நடைபெற்றது. அதில் பலர் செய்முறை தேர்வுக்கு வரவில்லை. எனவே செய்முறை தேர்வுக்கு வராத மாணவ-மாணவிகளை கண்டறிந்து பொதுத்தேர்வில் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 25 ஆயிரத்து 827 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத இருக்கின்றனர்.

இதில் முதல்கட்டமாக 13 ஆயிரத்து 31 மாணவ-மாணவிகளுக்கு கடந்த வாரம் செய்முறை தேர்வு நடந்தது. அதில் மாவட்டம் முழுவதும் 775 பேர் செய்முறை தேர்வுக்கு வரவில்லை. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினரை கொண்ட 170 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் செய்முறை தேர்வுக்கு வராதவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் ஏமாற்றம்

இதற்காக மாணவ-மாணவிகளின் வீட்டுக்கு ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் சென்று தேர்வு எழுத வரும்படி அழைத்தனர். அதில் ஒருசிலர் மட்டுமே பொதுத்தேர்வு எழுத வருவதாக தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வருவதற்கு மறுத்தனர். அதற்கு பெற்றோரும் ஆதரவாக இருப்பதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனினும் 775 பேரையும் பொதுத்தேர்வை எழுத வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்