ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை அசாம் மாநில சிறப்புக்குழு ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை தாக்கப்பட்டதாக பரவிய வீடியோவால் அசாமை சோ்ந்த சிறப்புக்குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2022-09-19 18:58 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை தாக்கப்பட்டதாக பரவிய வீடியோவால் அசாமை சோ்ந்த சிறப்புக்குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

யானை பற்றி பரவிய வீடியோ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு பெண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமால்யதா என ெபயரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் வைத்து அந்த யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து, பாகன்கள் 2 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை தாக்கப்படுவதாக தொடர்ந்து வீடியோ மூலம் வதந்தி பரவுகிறது.

தமிழக அரசு குழு

பின்னர், தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து யானை தாக்கப்பட்டதா? தற்போது யானையின் நிலைமை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் யானை நலமுடன் இருப்பதாக தமிழக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதற்கிடையே அசாமை சேர்ந்த வனப்பாதுகாவலர் அங்குள்ள ஐகோர்ட்டில் யானையை மீண்டும் அசாமிற்கு கொண்டு வர உத்தரவிடவேண்டும் என மனுத்தாக்கல் செய்தார்.

அசாம் மாநில குழு

இதனையடுத்து அசாம் மாநிலத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு குழுவில் வன பாதுகாவலர் ஹித்தேஷ் மிஸ்ரா, போலீஸ் சூப்பிரண்டு அபர்ணா நடராஜன், வன உயிரினவியல் பேராசிரியர் கே.கே.ஷர்மா, ரூப்ஜித் காகாதீ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினரும், தமிழகத்தை சேர்ந்த துணை வன பாதுகாவலர் நாகநாதன், டாக்டர் சுகுமார் மற்றும் அந்தோணி ரூபின் உள்ளிட்டோரும் யானையை நேற்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசுக்கும், அசாம் அரசுக்கும் சமர்ப்பிக்க இருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஆய்வின் போது ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, தாசில்தார் ராமசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் கீதா, வருவாய் ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்