ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-22 12:43 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே முதிய தம்பதியர் வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த கும்பலை கைது செய்யக் கோரி கிராம மக்கள் நேற்று ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வீடுபுகுந்து கொள்ளை

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கெட்டிமாள்புரத்தை சேர்ந்தவர் பூசை பாண்டி (வயது 72). இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகன் இசக்கி ராஜா மும்பையில் பணிபுரிந்து வருகிறார். பூசைப்பாண்டியும், புஷ்பாவும் கெட்டியம்மாள்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை அருகில் உள்ள குறிச்சி கோவில் விழாவிற்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு பூசைபாண்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக புஷ்பாவும் மருத்துவமனையில் தங்கியுள்ளார். இதை அறிந்த மர்மநபர்கள் கடந்த 15-ந்தேதி கெட்டியம்மாள்புரத்திலுள்ள வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளை சென்று, பீரோவையும் உடைத்து 5 பவுன் நகை, ரூ.45 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

கடந்த பலநாட்கள் ஆகியும் போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்காததால் அதிருப்தி அடைந்த தகவலும் தெரியாததால் கெட்டியம்மாள்புரம் கிராம மக்கள் நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் திரண்டு வந்தனர். அங்கு கொள்ளையர்களை கைது செய்யக் கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பூசைபாண்டி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்