ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில்சித்திரை திருவிழா எதிர்சேவை

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை திருவிழா எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-16 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெருமாள் சுவாமிகளுக்கு நம்மாழ்வார் நிகழ்ச்சி நடந்தது. எதிர்சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரைதிருவிழா

நவதிருப்பதி கோவில்களில் முதலாவது ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி புறப்பாடு நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஐந்தாம் திருநாளை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. இதையடுத்து, சுவாமி கள்ளபிரான் முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

எதிர்சேவை

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் இருந்து சுவாமி நம்மாழ்வார், சுவாமி பொலிந்து நின்றபிரான் ஆகியோர் புதுக்குடியில் உள்ள ரங்கராஜநாதர் பெருமாள் கோவிலுக்கு வந்து விடையாற்று நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் எழுந்தருளினர். இதேபோல், நத்தம் விஜயாசனப் பெருமாள், திருப்புளிங்குடி காசினிவேந்தப் பெருமாள் ஆகிய சுவாமிகள் கள்ளபிரான் கோவிலுக்கு முன்பு எழுந்தருளினர். பின்னர், சுவாமி கள்ளபிரான், சுவாமி காசினிவேந்த பெருமாள், சுவாமி விஜயாசனப் பெருமாள் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று நள்ளிரவில் குடவரை பெருவாயில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய நம்மாழ்வாருக்கு சுவாமி கள்ளபிரான், பொழிந்துநின்றபிரான், காசினிவேந்த பெருமாள் விஜயாசனப் பெருமாள் ஆகியோர் கருட வாகனங்களில் எழுந்தருளி எதிர்சேவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு நாளைமறுநாள் (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்