ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்

மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2023-10-14 21:39 GMT

ஸ்ரீரங்கம்:

மகாளய அமாவாசை

புரட்டாசி மாதத்தில் பவுர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலான காலம் மகாளயபட்சம் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் பித்ருக்கள் என்று கூறப்படும் முன்னோர்கள் வானுலகில் இருந்து மண்ணுலகை நெருங்கி வருவதாக நம்பப்படுகிறது. அவ்வாறு வரும்போது அவர்களை மகிழ்விக்கும் சடங்குகளை நாம் செய்தால், அவர்களின் ஆசியோடு நம் வாழ்வில் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.

இதில் முக்கிய தினமான மகாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி அமாவாசை நாளை மற்ற நாட்களோடு ஒப்பிடுகையில் பிதுர்கர்மா செய்ய மிகுந்த காலமாக புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக தர்ப்பணம் கொடுக்க முடியாமல் போனவர்கள், மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், அது அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் கொடுத்ததற்கு ஈடானது ஆகும்.

தர்ப்பணம்

இந்நிலையில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி அதிகாலை முதலே திருச்சி மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் குவிந்தனர். அங்கு காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் உதவியுடன் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அம்மா மண்டபம் படித்துறை மட்டுமின்றி வீரேஸ்வரம் கருடமண்டபம், மேலூர் அய்யனார் கோவில் பகுதிகளிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

காவிரி ஆற்றில் குறைந்த அளவு தண்ணீரே சென்றதால் ஆற்று மணலில் அமர்ந்தும் சிலர் தர்ப்பணம் கொடுத்தனர். அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்தவண்ணம் இருந்ததால் அம்மா மண்டபம் பகுதியே கூட்ட நெரிசலாக காணப்பட்டது. மாநகராட்சி சார்பில் அம்மா மண்டபம் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தனர். இதேபோல் ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

முசிறி, தா.பேட்டை

இதேபோல் முசிறி காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றின் நடுப்பகுதி வரை சென்று புனித நீராடினர்.

மேலும் தா.பேட்டை பிள்ளாதுரை பெரியமாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, மாரியம்மன், செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி, தேவானூர் ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்