சிகிச்சை பெற மறுத்து போராட்டம் நடத்திய இலங்கை தமிழர்கள்
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மறுத்து இலங்கை தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலைக்கு முயற்சித்த 20 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மறுத்து இலங்கை தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலைக்கு முயற்சித்த 20 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை முயற்சி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு முடிந்ததும் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பவும் அவர்கள் கோரிக்கை விடுத்து சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
இதில் இலங்கை தமிழர்கள் 20 பேர் நேற்று முன்தினம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில், உமாரமணன் (வயது 44) என்பவர் டர்பைன்ட் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். மற்ற 19 பேர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் போராட்டம்
இந்தநிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள உமாரமணன் தவிர மற்ற 19 பேர் நேற்று மதியம் சிகிச்சை பெற மறுத்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கைகளில் குளுகோஸ் ஏற்றிக்கொண்டிருந்த குழாய்களை பிடுங்கி எறிந்தனர். அத்துடன் கோஷங்களையும் எழுப்பினார்கள்.
உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தெற்கு துணை போலீஸ்கமிஷனர் ஸ்ரீதேவி, உதவி போலீஸ்கமிஷனர்கள் அஜய்தங்கம், பாஸ்கர் மற்றும் போலீசார், திருச்சி ஆர்.டி.ஓ. தவசெல்வம் ஆகியோர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலில் விழுந்து மன்னிப்பு
அப்போது, இலங்கை தமிழர்கள் தங்கள் குறைகளை கண்ணீா் மல்க துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவியிடம் கூறினார்கள். அப்போது, தங்கள் மீது உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். வழக்குகள் முடிந்ததும் தாய் நாட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக சிறப்பு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், தாங்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கும் காலத்தை விட அதிக நாட்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி, துணை போலீஸ் கமிஷனரின் காலில் விழுந்தனர். உடனே அவர், அவர்களை தடுத்து, உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளார். விரைவில் நல்ல தகவல் கிடைக்கும். அதுவரை நீங்கள் போராட்டத்தை கைவிட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.
வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள தங்கள் படுக்கைக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்றதாக உமாரமணன், செல்வம், விஜயகுமார், ஜனா, ராஜா உள்பட 20 பேர் மீதும் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.