வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றனர்.

Update: 2023-08-10 19:15 GMT

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றனர்.

வேதாரண்யம் மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மணிவண்ணன், பொன்னுசாமி, வடுகநாதன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 5 பைபர் படகுகளில் வடுகநாதன்(வயது 25), தியாகராஜன்(40), ரஞ்சித்(30), ராஜேந்திரன்(55), சிவக்குமார்(40), அருண்குமார்(25), கோவிந்தசாமி(55), செல்லமணி(40), மணிமாறன்(40), கதிரவன்(40), கல்யாணசுந்தரம்(40), சிவலிங்கம்(32) ஆகியோர் உள்பட 19 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் வலைவிரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடல் கொள்ளையர்கள் 6 ேபர் 2 பைபர் படகுகளில் அங்கு வந்தனர்.

இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்களின் படகுகளில் ஏறிக்கொண்ட இலங்கை கடல் கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியதுடன் மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தினர்.

மேலும் மீனவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 5 ஜி.பி.எஸ். கருவிகள், பேட்டரிகள், 500 கிலோ மீன்கள், 30 லிட்டர் டீசல் உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துவிட்டு, மீனவர்களை கரைக்கு செல்லும்படி விரட்டி அடித்தனர்.

இலங்கையை சேர்ந்த கடல் கொள்ளையர்களின் திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த வேதாரண்யம் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்கள் ஏதுமின்றி நேற்று அதிகாலை வெறும் கையுடன் ஆறுகாட்டுத்துறை மற்றும் வானவன்மகாதேவி கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களிடம் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், மீன்வள அதிகாரிகள் மற்றும் 'கியூ' பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் அனைத்து மீனவர்களுக்கும் உள்காயம் ஏற்பட்டுள்ளது. வானவன்மகாதேவியை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் மற்றும் கடல் கொள்ளையர்களால் மீன்பிடி தொழிலுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக வேதாரண்யம் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்