தமிழக விளையாட்டுத்துறை இந்தியாவின் முதன்மை துறையாக மாறும்

தமிழக விளையாட்டுத் துறை இந்தியாவின் முதன்மை துறையாக மாறும் என காட்பாடியில் நடந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2023-07-31 18:52 GMT

சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா

ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட திட்டக்குழு தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

முதன்மை துறையாக...

ஒரு காலத்தில் இந்தியா என்றால் ஆக்கி விளையாடுக்கு தான் முதலிடம். இப்போது கிரிக்கெட் பக்கம் சாய்ந்துள்ளது. நான் பள்ளியில் படிக்கும்போது, ஆக்கி விளையாடினேன். அப்போது எனது காலில் ஒருவன் அடித்து விட்டான். நான் கோபத்தில் அவனை திருப்பி அடித்து விட்டேன். இதை பார்த்து ஆசிரியர் உனக்கு ஆக்கி விளையாட்டு சரிப்பட்டு வராது என கூறிவிட்டார். அதிலிருந்து நான் ஆக்கி விளையாடுவதில்லை. ஆக்கி வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன்.

விளையாட்டுத் துறையை இந்தியாவில் முதன்மை துறையாக மாற்ற முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார். அதனால்தான் அந்த துறையை தன்னுடைய மகன் உதயநிதியிடம் ஒப்படைத்துள்ளார். தமிழக விளையாட்டுத் துறை இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முதன்மை துறையாக மாறிவிடும். விளையாட்டு சாதாரணமானது அல்ல. இளம் வயதில் உடலை யார் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு உள்ளம் பத்திரமாக இருக்கும். உடலும், உள்ளமும் நன்றாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆக்கிக்கு மறுபடியும் முக்கியத்துவம்

விழாவில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் வாழ்த்தி பேசுகையில், நாங்கள் படிக்கும் காலத்தில் கால்பந்து மற்றும் ஆக்கி விளையாட்டு முக்கிய இடம் பிடிக்கும். தற்போது கிரிக்கெட்தான் மாணவர்களின் முக்கிய விளையாட்டாக மாறியது. தற்போது மறுபடியும் ஆக்கிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் விளையாடுகின்றன. பள்ளியில் படிக்கும் போது விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். கல்லூரியில் படிக்கும் போது விளையாட்டு குறைந்து பேச்சு அதிகமாகி விட்டது.

மாணவர்கள் படிக்கும் போது விளையாட்டுக்கு நேரம் ஒதுக்கி பயிற்சி எடுக்க வேண்டும் என்றார்.

விழாவில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சீனிவாசன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்