பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சாலையோர மிதிவண்டி போட்டி, சிலம்பம், ஜூடோ ஆகிய போட்டிகள் நேற்று தனித்தனியாக நடத்தப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்ட மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மிதிவண்டி, ஜூடோ
சாலையோர மிதிவண்டி போட்டிகளில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பாரதியும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மிருதுல்லாவும், 19 வயதிற்குட்பட்ட பிரிவில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிகாவும் முதலிடம் பிடித்தனர்.
ஜூடோ போட்டிகளில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜான்சி ராணி வெற்றி பெற்றார். சிலம்பம் போட்டிகளில் புதுவேட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாருலதாவும், மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தியும், துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்லம்மாளும் வெற்றி பெற்றனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகளும், வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி மாணவிகளுக்கான நீச்சல், டேக்வாண்டோ, வாள்வீச்சு, ஸ்குவாஷ் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.