மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
சாக்கோட்டை
காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டார வள மையத்தில் சாக்கோட்டை வள மையம் உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் உதவி உபகரண பொருட்கள் வழங்கும் விழா காரைக்குடி சின்னையா அம்பலம் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு காரைக்குடி நகராட்சி கவுன்சிலர்கள் முகமதுசித்திக், பசும்பொன் மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தனர். சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் பரிமளம், ஜோசப்ஆண்டோரெக்ஸ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வக்குமார், சின்னையா அம்பலம், பள்ளி தலைமை ஆசிரியை மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கான ஓட்ட பந்தயம், அதிர்ஷ்ட முனை, கரண்டியில் எலுமிச்சை பழத்தை எடுத்து ஓடுதல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சக்கர நாற்காலி, நடை வண்டி காற்று மெத்தை, காதொலி கருவி உள்ளிட்ட பல்வேறு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் சபா உறுப்பினர்கள் ஜமால், மாலிக், ஆறுமுகம், ரியாஸ், வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் சின்னையா அம்பலம் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சாக்கோட்டை ஒன்றிய சிறப்பு கல்வியாளர்கள் அறிவழகன், ஆறுமுகம், கோமதி, சித்திரைசெல்வன், இயன்முறை மருத்துவர் கோகிலா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் சாக்கோட்டை சிறப்பு கல்வியாளர் சுகந்தி நன்றி கூறினார்.