விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்

விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-03-16 20:12 GMT

தஞ்சை சீனிவாசபுரம் காமராஜர் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

காமராஜர் சாலை

தஞ்சை சீனிவாசபுரம் அருகே காமராஜர் சாலை, கிரிரோடு, ராஜன் சாலை, ராஜாஜி ரோடு, ராஜராஜசோழன் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகள் வழியாக ரெட்டிபாளையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. கிரிரோட்டில் 2 தனியார் பள்ளிகள் உள்ளது.

இதன்காரணமாக மாணவர்களும் அதிகளவில் இந்த சாலைகள் வழியாக சென்று வருகின்றனர்.இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்தன. அப்போது பழைய சாலைகள் அகற்றப்பட்டு புதிதாக சாலைகள் போடப்பட்டன.

வேகத்தடைகள் இல்லை

ஆனால் பள்ளி பகுதி, குறுக்கு சாலைகள் இருக்கும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.

அவர்கள் மட்டுமின்றி குறுக்கு சாலையில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் மோதிக்கொள்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

பெற்றோர்கள் அச்சம்

மேலும், வேகத்தடை இல்லாத சாலையினால் பள்ளி மாணவர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடுமோ என பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்